Artist Murali From Batticaloa

கலைக்கு வயதில்லை - இத்தாகம் தீர்வதுமில்லை!

-------(0)-------

ழத்தின் கிழக்கில், கலை விளையும் பூமியாம் மட்டக்களப்பில் காலத்திற்குக் காலம் பலஅறிஞர்களும் கலைஞர்களும் தோன்றி சமூகத்திற்கென பலதரப்பட்ட சேவைகளையும் படைப்புகளையும் நல்கி மறைந்திருக்கின்றனர். அவர்கள் சுவாசித்த அதே காற்று இன்னும் இந்த வானவெளிகளில் கலந்திருப்பதுதான் காரணமோ தெரியவில்லலை, இன்றும் இம்மண்ணில் சுயமாக பல கலைஞர்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வறுமையோ அல்லது இப்பிராந்தியத்தைப் புரட்டியெடுத்த கொடிய யுத்தமோ (1975 முதல் - 2009 வரை) கலைக்கோ, கலைஞனுக்கோ ஒரு பொருட்டல்ல என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக திகழ்பவர் மட்டக்களப்பு மண்ணின் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சிற்பிகளில் ஒருவரும், ஓவியரும் கவிஞருமான திரு.ப.முரளிதரன் அவர்கள்.

1975ல் மட்டக்களப்பு - புளியந்தீவு எனும் பகுதியில் பெற்றோருக்கு ஒரேயொரு மகனாக பிறந்த இவர் மிகச்சிறுவயதில் தந்தையை இழந்ததுடன் சேர்ந்து விளையாட சகோதரர்கள் இல்லாமையாலும் - வறுமையாலும் இவரின் பிரதான விளையாட்டுப் பொருளாக களிமண் சேர்ந்துகொண்டது. பாம்புப் புற்றை (கறையான் புற்று) வெட்டி அக்களிமண்ணைக்கொண்டு உருவங்கள் செய்து விளையாடத்தொடங்கிய இவர் பிற்காலத்தில் மட்டக்களப்பின் கேந்திர ஸ்தானங்களில் நின்று காலங்கடந்தும் இவரின் பெயரைப் பறைசாற்றப்போகும் சிற்பங்களை செதுக்கப் போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

மட்டக்களப்பு பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் காணப்படும் ஓர் ஆளுயர சாரணச் சிறுவன் (Boy Scout) சிலை  இவரின் கைவண்ணத்தில் உருவாகிய முதலாவது படைப்பாகும். இதனை உருவாக்கியபோது இவரின் வயது இருபத்தி மூன்று மாத்திரமே!

1999ம் ஆண்டு சாரணர் தினத்தில் மட்டக்களப்பு இளைஞர் சாரணீயத்தின் 80ஆவது நிறைவையொட்டி நிறுவப்பட்ட இச்சிற்பத்தின் வடிவமைப்பிற்காக முரளிதரன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும், பொற்கிழி வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

 

 

 உயிரியல் விஞ்ஞான பட்டதாரியான இவர் மனித அங்காதிபாதத்தை (Human Anatomy) முறையாகப் புரிந்துகொண்டதன் காரணத்தினால், இவர் தனது சிற்பங்களில் அங்க இலக்கணங்களுக்குக் கூடிய முக்கியத்துவம் தருவதைக் காணமுடியும். 

1814ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ஆறு மாத கடல் பயணத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு வந்து மெதடிஸத்தையும், இலங்கையின் முதலாவது பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்தமத்திய கல்லூரியையும் ஆரம்பித்தவரான வண.வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிற்பம் அகில இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வேண்டுகோளிற்கு இணங்க 2001ம் ஆண்டு மட்டக்களப்பு பொது வாசிகசாலை அருகில் நிறுவப்பட்டது. 

சுமார் ஆறு மாத கால கடின உழைப்பின் வெளிப்பாடான இச் சிற்பம், ப.முரளிதரனின் திறமைக்கு மற்றுமொரு சான்றாகும்.

இச்சிற்பத்தின் வடிவமைப்பிற்காக முரளிதரன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும், பொற்கிழி வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். 

இதே காலப்பகுதியில் இவரால் வடிவமைக்கப்பட்ட மற்றுமொரு சிற்பமான ”நைட்டிங்கேல்“ அம்மையாரின் சிற்பம் மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் காணப்படுகின்றது. கலைத்துறையில் தனது ஈடுபாட்டை ஓர் பொழுது போக்காகவே கொண்டிருந்த திரு.ப.முரளிதரன் அவர்கள் சமகாலத்தில் தனது பட்டப் படிப்பையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ததுடன் விசேட பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999ம் ஆண்டு அகிலஇலங்கை ரீதியிலான மரம் மற்றும் மெழுகு சிற்பப் போட்டிகளில் கலந்தகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

இவரின் இந்தச் சாதனைப் புத்தகத்தின் ஏனைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்க இங்கே அழுத்தவும்!

 


Sculptures by Artist Murali


Go Back to Home

 

Share on Facebook